×

ராமநத்தம் அருகே மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் வங்கி மேலாளர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர்

திட்டக்குடி, ஏப். 18: ராமநத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணம் செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (36). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தன்னுடன் பணிபுரியும் கேசவன் (27), சசிகுமார் (25), அருண்குமார் (23) உள்ளிட்டோருடன் தனது காரில் திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.

ராமநத்தத்தை அடுத்த ஆவட்டி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புக் கட்டையின் மீது மோதியது. இதில் கார் திடீரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் காரில் இருந்த 4 பேரும் அலறியடித்துக் கொண்டு உடனடியாக காரில் இருந்து வெளியேறினர். இதுபற்றி உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநத்தம் போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். இதனால் அரைமணி நேரம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ராமநத்தம் அருகே மேம்பால தடுப்புக் கட்டையில் மோதி தீப்பிடித்து எரிந்த கார் வங்கி மேலாளர் உள்பட 4 பேர் உயிர்தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thittakudi ,Trichy-Chennai National Highway ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...