×

முத்துப்பேட்டையில் சாலையோர குப்பையில் கொட்டப்படும் ரேஷன் அரிசி: அரசு நடவடிக்கை எடுக்குமா?

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் பேரூராட்சிக்குப்பட்ட மன்னார்குடி சாலை, பெரியகடை தெரு, தெற்கு தெரு, பேட்டை, செம்படவன்காடு, ஆசாத்நகர், மருத்துவமனை தெரு ஆகிய 8 இடங்களில் உள்ளது. இதில் மாதந்தோறும் குடும்ப அட்டைகளுக்கு ஒருவர் இருந்தால் 12 கிலோ அரிசி. 2 பேர் இருந்தால் 16 கிலோ. 3 பேர் இருந்தால் 18 கிலோ என 30 கிலோ வரை கொடுக்கப்படுகிறது. இதில் ஏஏஒய் கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் அரசியை பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதனை பலர் ரேஷன் கடை பணியாளர்களிடமும் பலர் ரேஷன் கடை வாசலிலும் விற்பனை செய்துவிடுகின்றனர். அப்படி இல்லையேல் வீட்டில் சேமிப்பில் பலர் வைத்திருப்பார்கள். அதனை சுற்றுப்பகுதி ஏழை ஏழை எளிய மக்கள் வீடு தேடி வந்து வாங்கி செல்வார்கள். பலர் தாங்கள் பயன்படுத்தாவிட்டாலும், யாரையாவது விட்டு வாங்கிக்கொள்ள செல்பவர்களும் உண்டு. இதனால் அரிசி எப்படியும் பலருக்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபகாலமாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இருப்பதில்லை. புழுத்துபோய் காணப்படுவதுடன் ஒருவகை துர்நாற்றத்துடன் உள்ளது. இது குறித்து மக்கள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்கையில், அங்கிருந்து இப்படிதான் வருகிறது. நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கூறி வருகின்றனர். இதனால் குடும்ப அட்டைதார்கள் வேதனையுடன் வாங்கி சென்றாலும் இந்த ரேஷன் அரிசியை அவர்களிடமிருந்து வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால் முத்துப்பேட்டை பகுதியில் பலரது வீடுகளில் பயன்படுத்தாமல் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக உள்ளது. இதனால் பல மாதமாக தேங்கியுள்ள அரசி மேலும் வீணாகி குப்பைகளில் கொட்டும் நிலை தற்போது உருவாகியுள்ளது.அதன் சாட்சியாக நேற்று முத்துப்பேட்டை குண்டாங்குளம் பின்புறம் பழைய தியேட்டர் சாலையோரம் குப்பைகளுடன் சிறு சிறு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி தூக்கி வீசப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. இதனை பார்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழியிலாதவர்கள் இந்த நாட்டில் இருக்கும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் மக்களை வேதனையடைய வைத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், முத்துப்பேட்டை பகுதியில் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ேரஷனில் கொடுக்கப்படும் இலவச அரிசி மிகவும் மோசமாக உள்ளது. அந்த அரசியை வாங்காமல் விட்டால் சலுகைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அரசியை வாங்கி சென்றாலும் அதை இலவசமாக வாங்கிக்கொள்ள கூட ஆளில்லை. அதனால் இன்றைக்கு இந்த ரேஷன் அரிசியை பயன்படுத்தாமல் மூட்டை, மூட்டையாக ஆங்காங்கே குப்பைகளில் கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் இந்த அரிசியை உண்பதால் வயிறு செரிமான கோளாறு ஏற்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பல கால்நடைகள் இதனால் இறந்துள்ளன. ஆகவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி ரேஷன் கடைகளில் நல்ல அரசியை வழங்க வேண்டும். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த அரசியை மதிக்காமல் குப்பைகளில் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post முத்துப்பேட்டையில் சாலையோர குப்பையில் கொட்டப்படும் ரேஷன் அரிசி: அரசு நடவடிக்கை எடுக்குமா? appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Muthupettai ,Tamil Nadu government ,Mannargudi Road, Periyakadai ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் கண்களுக்கு விருந்தளித்த கொண்றை பூக்கள்