×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சமூகநீதி போராளி இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்தை அமைச்சர் ஆய்வு

சிதம்பரம், ஜூலை 3: தமிழ்நாடு முதல்வர் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா நடைபெறும் இடங்களை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல், பொதுமக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் வகையிலும், மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், பல்வேறு துறைகளின் வாயிலாக வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்டந்தோறும் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதல்வர், 14ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து, 15ம் தேதி அன்று எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு அரங்கத்தை திறந்துவைத்து, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

சமூகத்திற்கு எல்.இளையபெருமாள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், சமூக நீதிக்காக போராடியதற்காகவும் ஆற்றிய தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில், சிதம்பரத்தில் இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில், ரூ.6.39 கோடி செலவில் பணிகள் நிறைவுற்று திறக்கப்பட உள்ளது. பொதுமக்களின் வசிப்பிடம் அருகாமையிலேயே சென்று அனைத்து துறை அலுவலர்களும் முகாம்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அவ்வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடர்ந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். துறை சார்ந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ளஅறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சமூகநீதி போராளி இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்தை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ilayaperumal centenary ,Chief Minister ,M.K. Stalin ,Chidambaram ,M.R.K. Panneerselvam ,District Collector ,S.P. Aditya Senthilkumar ,Tamil Nadu ,Cuddalore district ,Ilayaperumal centenary hall ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...