×

முக்கூடல் ராமசாமி கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பாப்பாக்குடி, ஏப். 11: முக்கூடலில் உள்ள பிரசித்திபெற்ற ராமசாமி கோயிலில் நடந்த ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடலில் பிரசித்திபெற்ற சீதாதேவி சமேத ராமசாமி கோயில் அமைந்துள்ளது. அத்துடன் இங்கு சிவகாமி அம்பாள் சமேத ராமேஸ்வர நாதர் கோயிலும் எழிலுடன் அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க இக்கோயில் சேனைத்தலைவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டதாகும். தனித்துவமிக்க இக்கோயிலில் கும்பாபிஷேகம் மேற்கொள்ள பக்தர்கள் முடிவுசெய்யப்பட்டு இதற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன.

இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று முன்தினம் காலை நடந்தது. முன்னதாக மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 23ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.

இதையடுத்து முக்கூடல் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து குதிரை சரத் வண்டியில் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட தீர்த்தம் கோயிலை வந்தடைந்ததும் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதற்கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 2,3,4,5ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 11.25 மணி அளவில் விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், 11.45 மணியளவில் மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீராணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு தீபாராதனை, எஜமானர் மரியாதை, அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் முக்கூடல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

இதையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முக்கூடல் சேனைத்தலைவர் சமுதாயம் சார்பாக நிர்வாகிகள் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post முக்கூடல் ராமசாமி கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ashtabandhana Maha Kumbabhishekam ,Mukoodal Ramasamy Temple ,Papakudi ,Jeernotharana Ashtabandhana Maha Kumbabhishekam ceremony ,Ramasamy Temple ,Mukoodal ,Seethadevi Sametha ,Ramasamy ,Temple ,Mukoodal, Nellai district ,Sivagami Ambal ,Ashtabandhana ,Maha ,Kumbabhishekam ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்