×

மாவட்டத்தில் 1,285 தொடக்கப்பள்ளிகள் திறப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1285 தொடக்கப்பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1 தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கும், ஜூன் 5ம் தேதி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னரும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இதன் காரணமாக, மாணவர்களின் நலன் கருதி, மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து, பள்ளிகள் திறப்பை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது.

இதனிடையே, 6 முதல் 12ம் வகுப்பு வரை, மாவட்டத்தில் உள்ள 777 பள்ளிகள், கடந்த 12ம் தேதி திறக்கப்பப்பட்டன. இந்நிலையில், நேற்று 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 1144 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 127 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1285 பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பூங்கொத்து, இனிப்பு, பிஸ்கட் கொடுத்து வரவேற்றனர். மேலும், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து, புதியதாக பள்ளியில் சேர்த்தனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய 5 மொழிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது,’ என்றனர்.

The post மாவட்டத்தில் 1,285 தொடக்கப்பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது