அம்பை, ஜூலை 2: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அருவியின் அருகில் அமைந்துள்ள வன பேச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவும், மழைவேண்டி மணிமுத்தாறு அருவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடந்தது. மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவிக்கு அருகில் வனபேச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கொடை விழா கால்நாட்டு கடந்த 27ம்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இக்கோயில் உள்ள பிள்ளையார், ஸ்ரீவனப்பேச்சியம்மன், பிரமாட்சி அம்மன், அகஸ்தியர், தளவாய் மாடசாமி, சுடலை மாடசாமி உள்ளிட்ட குலதெய்வங்களுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் போன்றவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகளுடன் வருஷாபிஷேக விழா நடந்து. பின்னர் மழைவேண்டி மணிமுத்தாறு அருவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை 3ம்தேதி அயன் சிங்கம்பட்டி பிரமாட்சியம்மன் கோயிலில் இருந்து கிரகம் எடுத்து ஜமீன் சிங்கம்பட்டி வழியாக மணிமுத்தாறு அருவி வனப்பேச்சியம்மன் கோயிலை சென்றடைகிறது. 4ம்தேதி கொடைவிழாவும், 5ம்தேதி அன்னதானமும் நடைபெற உள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அருவிக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நாட்டாமை சட்டநாதன், மகாதேவன் மற்றும் ஊர்மக்கள செய்து வருகின்றனர்.
The post மழை பெய்ய வேண்டி மணிமுத்தாறு அருவியில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.