×

மழைநீர் வீணாக கடலில் கலப்பது வருத்தமாக இருந்தாலும் மக்களின் உயிர் அதைவிட முக்கியம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று பார்வையிட வந்தார். பின்னர் அவர், ஏரியில் மொத்த நீரின் இருப்பு, வெளியேறும் உபரிநீர் அளவு ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அடையாறு ஆறு வழியாக கடலில் சென்று கலக்கிறது. அதனால் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள முகத்துவாரத்தில், தண்ணீர் எளிதாக செல்லும் வகையில் நவீன இயந்திரங்கள் கொண்டு மண் மேடுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை நேற்று சென்று பார்வையிட்டு வந்தேன். அதேபோல் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரமும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகும் பட்சத்தில், எல்லா மதகுகளும் படிப்படியாக மக்களுக்கு சேதாரம் ஆகாத வகையில் திறக்கப்படும். இவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறதே என்று எனக்கு அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட, அதைவிட மக்களின் உயிர் எங்களுக்கு மிகமுக்கியம். ஆற்றின் கரையோரம், கால்வாய் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுவாக நீர்நிலைகளில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக் கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டின் திட்ட வட்டமான முடிவு. அரசும் நீர் வளத்தை பாதுகாக்க, ஆக்கிரமிப்புகளை எவ்வளவு தான் அகற்றினாலும் கூட, மக்கள் மீண்டும் மீண்டும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நான்கு மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக இரண்டு மதகுகளை திறந்தால், அருகில் உள்ள கிராமங்களுக்கு ஆபத்து ஏற்படுமா என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டேன். அவர் அவ்வாறு ஆபத்து எதுவும் வராது என்று கூறினார். அதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.  நாளை பூண்டி, புழல் ஆகிய ஏரிகளை பார்வையிட இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்….

The post மழைநீர் வீணாக கடலில் கலப்பது வருத்தமாக இருந்தாலும் மக்களின் உயிர் அதைவிட முக்கியம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Thuraymurugan ,Chennai ,Tamil Nadu ,Water ,Chembarambakkam Lake ,Tremurugan ,
× RELATED புழல் மத்திய சிறையில் கைதிகளை...