×

மழைநீர் வடிகால் பணி தொய்வு ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நோட்டீஸ்: விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை, மே 8: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு மழை மற்றும் மாண்டஸ் புயலின் போதும் மழைநீர் சாலைகளில் தேங்காமல் புதியதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்கள் வாயிலாக நீர்நிலை ஆறுகள் மற்றும் கால்வாய் வழியாக வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படியும், மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனையின்படியும் கோவளம் வடிநிலப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணியானது (கே.எப்.டபள்யூ) என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ₹1714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6வது பிரதான சாலை, ஹிந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர் ஆகிய பகுதிகளில் மூன்று சிப்பங்களில் ₹150.47 கோடி மதிப்பீட்டில் 39.78 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள எம்.சி.என்.நகர், விஜிபி அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் ₹447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டு வருகின்றனர். மேலும், பணிகளை குறித்த நேரத்தில் முடிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்கப்படும், எனஎச்சரித்துள்ளனர். அதன்படி, ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்காமல் தாமதமாக மேற்கொண்டுள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறின்றி தகுந்த தடுப்புகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்திடவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மழைநீர் வடிகால் பணி தொய்வு ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நோட்டீஸ்: விளக்கம் அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல்...