×

மதுரை ரயில் நிலையத்தில் மீன்கள் சிலை வைக்காமலேயே வைத்ததாக கூறியது எப்படி? கோட்ட மேலாளரிடம் நீதிபதிகள் கேள்வி

 

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் மீன்கள் சிலைகளை வைக்காமலேயே எப்படி வைத்ததாக கூறப்பட்டது என ரயில்வே கோட்ட மேலாளரிடம் ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையை சங்க காலத்தில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் சின்னமாக மீன் இருந்தது. அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 15 அடி உயரத்தில் 3 டன் எடையில் 3 மீன்களின் சிலை கடந்த 1999ம் ஆண்டு நிறுவப்பட்டது.

ரயில் நிலைய சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன் மீன் சிலைகள் அகற்றப்பட்டன. ஆனால், பணிகள் முடிவடைந்த நிலையில் மீன் சிலைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. கடந்தாண்டு மதுரை எம்.பி வெங்கடேசன் முயற்சியால் மீன்கள் சிலையை மீண்டும் நிறுவும் பணிக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மீன் சிலைகள் மீண்டும் வைக்கப்படவில்லை. எனவே, மதுரை ரயில் நிலையத்தில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மீன்கள் சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்கக்கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தேன். அதில், பணிகள் முடிந்ததால் மீண்டும் அதே இடத்தில் மீன்கள் சிலை நிறுவப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், எனது மனு தள்ளுபடியானது. ஆனால், நீதிமன்றத்தில் கூறியபடி மீன்கள் சிலை வைக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ெபாது மேலாளர் பி.அனந்த் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், சிலைகள் மீண்டும் வைக்கப்படாமலேயே ஏன் நிறுவப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பணிகள் முடிந்ததும் நிறுவப்படும் என அவர் பதிலளித்தார். இதையடுத்து, மீன்களின் சிலையை வைக்காமலேயே, வைத்ததாக ஏன் கூறப்பட்டது. பணிகள் முடிந்ததும் எப்போது வைப்பீர்கள் என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 1க்கு தள்ளி வைத்தனர்.

The post மதுரை ரயில் நிலையத்தில் மீன்கள் சிலை வைக்காமலேயே வைத்ததாக கூறியது எப்படி? கோட்ட மேலாளரிடம் நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai railway ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...