×

மதுரை ரயில்வே கோட்ட வருமானம் ரூ.1,245 கோடி

மதுரை, ஜூன் 6: மதுரை கோட்ட ரயில்வே வருமானம் ரூ.1,245 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பில் 69வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்டது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் வத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: ரயில்வே ஊழியர்கள் அனைவரது ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூ.1,245 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதமின்றி பயணித்தல், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டம் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்கள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாள் கோரிக்கையான தூய்மையான நவீன கழிப்பறைகள் காரைக்குடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை மேலாண்மை திட்ட செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன்மூலம் ஓய்வு அறைகள் காலியாக உள்ள நிலவரம் பற்றியும், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரயில் ஓட்டுநரை அவர் பணியாற்ற வேண்டிய ரயில் புறப்படுவதற்கு முன்பு அவரை நினைவுபடுத்த ஓய்வு அறை அலுவலருக்கு தாமாக குறுஞ்செய்தி அனுப்புவதும் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். ரயில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 பார்சல் அலுவலகங்கள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளில் சிசிடிவி கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே கேட்களில் தகவல் தொடர்புக்காக குரல் பதிவு செய்யும் போன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

விழாவில், கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 26 ரயில்வே ஊழியர்களுக்கு ‘ரயில்வே புரஸ்கார்’ பட்டம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், கட்டமைப்பு முதன்மை திட்ட மேலாளர் ஹரிக்குமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மதுரை ரயில்வே கோட்ட வருமானம் ரூ.1,245 கோடி appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Division ,Madurai ,Madurai Division ,69th Railway Week ,Madurai Divisional Railway ,Manager ,Sarath vatsava ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...