×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 253 மனுக்கள் அளிப்பு

ஈரோடு, ஏப். 4: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பொதுமக்கள், கட்சியினர், அமைப்பினர் 253 மனுக்களை அளித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். இதில், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவி தொகைகள் கேட்டும், வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 253 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றன. இதைத்தொடர்ந்து, இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தார். கூட்டத்தில், மொட்டக்குறிச்சி வட்டம் எழுமாத்தூர் கிராமம், மஜரா நெறிப்பாறை காலனியை சேர்ந்த கனகராஜ், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அவரது மகன் லட்சுமணனிடம் கலெக்டர் வழங்கினார்.

இதேபோல, அந்தியூர் வட்டம், பர்கூர் கிராம உதவியாளராக பணியாற்றிய சின்னசாமி காலமானதையடுத்து, அவரது மகன் கோவிந்தராஜூக்கு அலுவலக உதவியாளர் பணிக்கும், பெருந்துறை வட்டம், சென்னிமலை கிராம உதவியாளராக பணியாற்றிய முருகேசன் காலமானதையடுத்து, அவரது மகன் அருள்குமார் என்பவருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், பயிற்சி துணை கலெக்டர் காயத்ரி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமரன், கலால் உதவி ஆணையர் சிவகுமரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 253 மனுக்கள் அளிப்பு appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Erode ,People's Grievance Day ,Erode Collector ,
× RELATED தேர்தல் நடத்தைவிதிகள் ரத்து 10ம்தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்