×

போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் பலி * தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார் * போலீசார் விசாரணை திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலை அருகே போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் பலியானதாக உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி இந்திராணி(48). திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு இரும்பு கதவில் சிக்கி காலில் அடிபட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும், காயம் குணமாகவில்லையாம். இந்நிலையில், புதுமல்லவாடி பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் சரவணன்(50) என்பவர், கிளினிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டு, இந்திராணி நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளார். அப்போது, இந்திராணியின் காலில் இருந்த காயத்துக்கு மருந்து தடவி, பின்னர் வலி குறைவதற்காக ஊசி போட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, இந்திராணிக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவரை பரிசோதித்த சரவணன், அவர் கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து உடனடியாக ஆட்டோ மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு, இந்திராணியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதை உறுதிபடுத்தியுள்ளனர். அதனால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, இந்திராணியின் மகள் சங்கீதா, திருவண்ணாமலை தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் நேரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், புதுமல்லவாடி கிராமத்தில் மெடிக்கல் ஷாப்பில் கிளினிக் நடத்தி வரும் போலி டாக்டர் சரவணன், டிப்ளமோ நர்சிங் படித்திருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர் தலைமறைவாகி உள்ளார். எனவே, அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, சரவணன் நடத்தி வரும் கிளினிக்கில் சோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

The post போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் பலி * தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார் * போலீசார் விசாரணை திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து...