×

போதைப்பொருட்களை கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது: 102 கிலோ புகையிலை, கார் பறிமுதல்

திருவள்ளூர், ஜூலை 11: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கூல் லிப் என்று சொல்லக்கூடிய போதை பொருள் குறைந்த விலையில் கிடைப்பதால் மாணவர்கள் அதை எளிதாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் அருகில் உள்ள கடைகளில் இந்த கூல் லிப் போதை வஸ்து அமோகமாக விற்பனை ஆகிறது. கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வதால், அதனை ஒரு சிலர் இரு சக்கர வாகனம் அல்லது ஆட்டோக்களில் கொண்டு வந்து பள்ளி, கல்லூரி அருகே விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை மாணவிகளும் அதிக அளவில் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

கர்ப்பப்பை பிரச்னை, மாதவிடாய் பிரச்னை போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மாணவிகள் ஆளாக நேரிடும். இதை அறியாத மாணவ, மாணவிகள் இந்த கூல் லிப் என்ற போதை பொருளை அதிகளவில் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த காரை மடக்கி சாதனை செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல் போன்ற புகையிலை பொருட்கள் 102 கிலோ இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த காரையும், 102 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், இதனை கடத்தி வந்த திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சட்ராராம்(35) மற்றும் தயாராம்(22) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.

1.2 கிலோ கஞ்சா பிடிபட்டது
ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆவடி முழுவதும், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபிபாஷா(40) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அந்த வீட்டை சோதனை நடத்திய தனிப்படை போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை செய்யும் சபிபாஷா என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post போதைப்பொருட்களை கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது: 102 கிலோ புகையிலை, கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : North State ,Tiruvallur ,Gutka ,Hans ,Kool Lip ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை...