×

பேரணி, புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஜூலை 19: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு, பேரணி மற்றும் புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், தமிழ்நாடு நாள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற பேரணியை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு நாள் முக்கியத்துவம் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று, பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் குறித்து பதாகைகள் ஏந்திய பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த பேரணி பழைய பெங்களூர் சாலை வழியாக மாங்கனி கண்காட்சி வளாகத்தில் நிறைவடைந்தது. தமிழ்நாடு நாளை, இளைய தலைமுறையினரும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனத்தின் மூலம் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை கண்டுகளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., சரோஜ்குமார் தாக்கூர், வருவாய் கோட்டாட்சியர் பாபு, ஏடிஎஸ்பி விவேகானந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post பேரணி, புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu Day.… ,
× RELATED விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால்...