×

பெருங்களூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்; மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை, ஜூலை 24: புதுக்கோட்டை ஒன்றியம் பெருங்களூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா, தொழிலாளர் துறை சார்பில் ஒருவருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூர் பிடாரி அம்மன் திருமண மஹாலில் நேற்று நடைபெற்ற ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா, மக்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை கடந்த 15.7.2025 அன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெருங்களூர் பிடாரி அம்மன் திருமண மஹாலில் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு, மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்கள் கேட்டறியப்பட்டது. மேலும், இம்முகாமில் விண்ணப்பித்த பயனாளிக்கு, தொழிலாளர் நலத்துறை சார்பில், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மேலும், இன்று (24ம் தேதி) உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது, புதுக்கோட்டை மாநகராட்சி 5 மற்றும் 6 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்கோகர்ணம், கோவில்பட்டி சமுதாயக்கூடத்திலும், அறந்தாங்கி நகராட்சி, 3, 4 மற்றும் 5 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேஸ்வரி மஹாலிலும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும், பொன்னமராவதி – 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு காரையூர் ஸ்ரீ குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும், ஆவுடையார்கோவில் – 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமானேந்தல் பாலகிருஷ்ணன் மஹாலிலும், விராலிமலை – 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கல்குடி ஊராட்சி, கிராம சேவை மையக் கட்டிடத்திலும் நடைபெற உள்ளது.

‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். எனவே, தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்ட முகாம்களை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.

இம்முகாமில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்நாயகி, மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெருங்களூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்; மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Stalin camp ,Perungalur ,Labour Welfare Board ,Pudukkottai ,Collector ,Aruna ,Stalin ,Pudukkottai Union ,Welfare Board ,Labour Department ,Pudukkottai District ,Perungalur… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...