×

புதுச்சேரி மாநில பாஜ தலைவர் பொறுப்பேற்பு புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி, ஜூலை 1: புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன் என வி.பி.ராமலிங்கம், பதவியேற்பு விழாவில் பேசினார். அகில இந்திய பாஜவுக்கு இந்த மாதம் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதையொட்டி நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், பாஜ தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முன்னதாக 30ம் தேதி பாஜ தலைமை அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை வி.பி ராமலிங்கம் தாக்கல் செய்திருந்தார். ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் பரிசீலித்து ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முறைப்படியான அறிவிப்பு செய்வதற்கான கூட்டம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

இதில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், புதுச்சேரியில் புதிய பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டதையும், அவர் 2027ம் ஆண்டுவரை தலைவராக செயல்படுவார் என்பதையும் அறிவித்தார். தொடர்ந்து அவரிடம் இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்வானதையும் கூட்டத்தில் அறிவித்தார்.

தொடர்ந்து பாஜ தலைவருக்கு, மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம், பாஜ எம்எல்ஏக்கள் சாய்.ஜெ.சரவணன்குமார், ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பாஜ தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் நிர்வாகிகள் மத்தியில் வி.பி.ராமலிங்கம் பேசுகையில், ஆட்சி அதிகாரத்தில் மட்டும் அமர்வதற்கான கட்சி இதுவல்ல. பலர் தங்கள் உழைப்பையெல்லாம் கொட்டி, உயிர்தியாகம் செய்த கட்சி. மற்ற கட்சிகளை போல் இல்லாமல், அடிமட்டத்தில் கட்சிக்காக உழைத்தவர்களை தேடிப் பிடித்து பதவி கொடுக்கிற கட்சி, நேர்மையான கட்சி. யாருக்கு திறமை இருக்கிறதோ, அவர்களை அங்கீகரிக்கும் கட்சியாக இருக்கிறது.

தலைமை என்னை நம்பி பொறுப்பு கொடுத்துள்ளது. அதற்காக ஒவ்வொருவர் காலில் விழுந்தாவது, 2026ம் ஆண்டு புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன். இது எனக்கு மிகப்பெரிய பணி. நீங்கள் எனக்கு முழுமையாக ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் தலைவராக இருந்தவர், கட்சி தலைமையின் கட்டளையை ஏற்று 80 சதவீதம் சிறப்பாக கொண்டு சென்றார். நான் அவரை விட சிறப்பாக செயல்படவும், தொண்டர்கள் தோளோடு, தோள் கொடுத்து உழைத்தால்தான் 2026ம் ஆண்டு தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை கொடுக்க முடியும், என்றார்.

The post புதுச்சேரி மாநில பாஜ தலைவர் பொறுப்பேற்பு புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன் வி.பி.ராமலிங்கம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Puducherry State ,BJP ,President V.P. Ramalingam ,Teja coalition government ,Puducherry ,V.P. Ramalingam ,All India BJP ,Puducherry State BJP ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...