×

புதுச்சேரி அருகே ரவுடியின் தம்பியை கொன்றது ஏன்?

காலாப்பட்டு, ஜூன் 1: புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம் அருகே ரவுடியின் தம்பியை கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் (35). இவர் பொம்மையார்பாளையம் தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் இவர், வழக்கம்போல் ஓட்டலுக்கு வேலைக்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பொம்மையார்பாளையம் இசிஆரில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையில் சென்றபோது, பின்னால் பைக்குகளில் துரத்தி வந்த 6 பேர் கும்பல் திடீரென விமல்ராஜை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி வெட்டியது. இதில் விமல்ராஜிக்கு முகம், கழுத்து பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதையடுத்து, கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து கீழ்புத்துப்பட்டு ஜனா (32), அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த உதயகுமார் (26), கார்த்திகேயன் (32), லோகேஷ் (25), காலாப்பட்டு தாமஸ் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் விமல்ராஜை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அதில், விமல்ராஜின் அண்ணன் வினோத்ராஜ் கொலை வழக்கில் நாங்கள் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறோம். இதனால் வினோத்ராஜின் கொலைக்கு பழியாக ஜனா, உதயகுமார் ஆகியோரை தீர்த்துக்கட்ட விமல்ராஜ் திட்டமிட்டதை தெரிந்து கொண்டோம். இதனால் முன்கூட்டியே அவரை கொலை செய்து விட்டால், பிறகு அந்த குடும்பத்தால் எந்த பிரச்னையும் வராது என்று நினைத்து, விமல் செல்லும் இடங்களை நோட்டமிட்டு வந்தோம். சம்பவத்தன்று காலை பொம்மையார்பாளையம் இசிஆரில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையில் சென்றபோது, அவரை சராமரியாக வெட்டிக் கொன்றோம் என்றனர். இதனை தொடர்ந்து, 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புதுச்சேரி அருகே ரவுடியின் தம்பியை கொன்றது ஏன்? appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kalapattu ,Kottakuppam ,Puducherry.… ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு