சேந்தமங்கலம், மார்ச் 31: கொல்லிமலையில் ₹1.79 கோடியில் தீயணைப்பு நிலையம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி, செம்மேடு பகுதியில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலைய அலுவலர், 11 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், தண்ணீர் நிரப்பிய தீயணைப்பு வாகனம் உள்ளது. கொல்லிமலை பகுதியில் தீ தடுப்பு பணிகளிலும் அருவிகளிலும் நீர்வீழ்ச்சிகளிலும் தவறி விழுபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மீட்புப் பணிகளிலும் வெயில் காலங்களில் தீ தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த கட்டிடம் இல்லாததால், வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது.
அலுவலகம் மட்டுமே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. வாகனங்கள் வெளியில் நிறுத்தப்பட்டு வருகிறது. மழை, வெயில் காலங்களில் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால், தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் வேண்டுமென நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மூலம், புதிய தீயணைப்பு நிலையம் கட்ட செம்மேடு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, ₹1.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிய தீயணைப்பு நிலையத்தில் அலுவலகம், 2 வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்த இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பணியாற்றும் நிலைய அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள், குடும்பத்தினருடன் குடியிருக்க கட்டிடம் கட்ட திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post புதிய தீயணைப்பு நிலையம் கட்டுமான பணி மும்முரம் appeared first on Dinakaran.