×

புதிதாக தொழில் துவங்கவுள்ள தொழில் முனைவோர்களுக்கு ₹1.35 கோடி மானிய தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் சார்பாக புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ₹5.40 கோடி மதிப்பீட்டில் 9 புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானிய தொகையாக ₹1.35 கோடி பெறுவதற்கான காசோலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். முன்னதாக திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் சிட்கோ சார்பில் ₹6.81 கோடி மதிப்பீட்டில் சாலைகள், மழை நீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு குட்டை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து, அவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தொழிற்பேட்டையில் 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ₹2.72 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார்.
மேலும், காக்களுர் தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ₹2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும், காக்களுர் தொழிற்பேட்டை மத்திய மின்பொருள் சோதனை கூடத்தில் ₹8.27 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் சோதனை கூடம் மற்றும் தீ பரவாமல் தடுக்கும் மின்சார கேபிள் சோதனை கூடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், கண்காணிப்பு பொறியாளர் சோமசுந்தரம், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், சுகுமார், திருமழிசை பேரூர் செயலாளர் முனுசாமி, பேரூராட்சி தலைவர் வடிவேலு, துணைத் தலைவர் மகாதேவன், திருமழிசை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கஜ்ராஜ், காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பாஸ்கரன், துணை செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் மோகன்ரவ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post புதிதாக தொழில் துவங்கவுள்ள தொழில் முனைவோர்களுக்கு ₹1.35 கோடி மானிய தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister Thamo Anparasan ,Tiruvallur ,Thiruvallur District Industrial Center ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!