×

பக்ரீத் பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

செஞ்சி, ஜூன் 6: செஞ்சி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்திபெற்றதாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

இதனால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்திபெற்ற சந்தையாக உள்ளது. இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் குர்பானி கொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக நேற்று காலையிலேயே செஞ்சி வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை வாரச்சந்தையான நேற்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளி மாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்கும் வாகனங்களில் வந்திருந்தனர்.

விற்பனைக்காக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையையொட்டி செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Senchi ,Bakrid festival ,weekly market ,Senchi, Villupuram district ,Senchi weekly market ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...