×

நெல்லையில் வீட்டுவசதி வாரியம் ‘விநோதம்’ மின் மீட்டர் இல்லாத வீட்டிற்கு ஒதுக்கீடு ஆணை

நெல்லை, ஜூலை 16: மின் மீட்டர் இல்லாத வீட்டிற்கு நெல்லையில் வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு வழங்கிய நிலையில், அடுத்தவர் வீட்டு மின்சாரம் திருட்டால் குட்டு அம்பலமாகியுள்ளது. பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 30 வாடகை குடியிருப்புகள் உள்ளது. இதில் ‘ஏ’ வகை உயர் அலுவலர்களுக்கு 3 அடுக்கு மாடிகளில் 18 வீடுகளும், டி வகை அடிப்படை பணியாளர்களுக்கு 2 அடுக்கு மாடிகளில் 12 குடியிருப்புகளும் உள்ளன. அடிப்படை பணியாளர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்பில் ‘சி’ பிளாக்கில் வசித்து வந்த அரசு ஊழியர் ஓய்வு பெற்றதால், அந்த வீடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு வீட்டு வசதி வாரியம் மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் நடவடிக்கை எடுத்த மின் வாரியம் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு மீட்டரை கழற்றி எடுத்துச் சென்று விட்டது.

இந்நிலையில் மின் மீட்டர் இல்லாத ‘சி’ பிளாக்கில் உள்ள அந்த வீட்டிற்கு அரசு ஊழியர் ஒருவருக்கு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு வழங்கியது. ஒதுக்கீடு கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு வந்த அரசு ஊழியர் மின் இணைப்பு இல்லாதது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து வீட்டு வசதி வாரியத்தில் முறையிட்டுள்ளார். உடனே களத்தில் இறங்கிய வீட்டு வசதி வாரியம், அதே பிளாக்கில் உள்ள மற்றொரு வீட்டு மின் இணைப்பில் வயரை இணைத்து மின் இணைப்பு வழங்கி விட்டது. மின் மீட்டர் இல்லாத வீட்டிற்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஒதுக்கீடு வழங்கியதோடு, அடுத்த வீட்டு மின்சாரத்தையும் திருடி மின் வாரியத்திற்கு ‘ஷாக்’ கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லையில் வீட்டுவசதி வாரியம் ‘விநோதம்’ மின் மீட்டர் இல்லாத வீட்டிற்கு ஒதுக்கீடு ஆணை appeared first on Dinakaran.

Tags : Nellai Housing Board ,Nellai ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்