×

நாட்டுக்கு யார் வளர்ச்சி முக்கியம் உங்கள் மகனின் சொத்துக்களை எனக்கு எழுதி வைக்க தயாரா? அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

உடுமலை: நாட்டுக்கு யார் வளர்ச்சி முக்கியம் என்று குற்றம்சாட்டிய அமித்ஷாவுக்கு, ‘எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் உங்கள் மகன் ஜெய்ஷா பெயரில் எழுதி வைக்க, நான் தயார்? உங்கள் மகன் சொத்துக்களை, எனது பெயரில் எழுதி வைக்க நீங்கள் தயாரா?’ என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர், நேற்று  காலை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை  தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு ஆகியோரை ஆதரித்து, உடுமலை முக்கோணத்தில்  திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: நான், குறுக்கு  வழியில் அரசியலுக்கு வந்ததாக மோடி கூறி உள்ளார். மோடிக்கு தெம்பு இருந்தால்  மக்களை சந்திக்கட்டும். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார்? என உலகம் அறியும். சசிகலாவின் காலை பிடித்து முதல்வர்  ஆனவர் அவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. உதயநிதி வளர்ச்சி முக்கியமா, தமிழகத்தின்  வளர்ச்சி முக்கியமா என அமித்ஷா கேட்கிறார். எனது வளர்ச்சி முக்கியமல்ல, நான், உங்கள் வீட்டு  பையனாக இருப்பதையே விரும்புகிறேன். எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பெயரில் எழுதி வைக்க, நான் தயார்? உங்கள் மகன் சொத்துக்களை, எனது பெயரில் எழுதி வைக்க நீங்கள் தயாரா? தமிழகத்தில், கடந்த பத்து வருடமாக ஆட்சி என்ற பெயரில் வெறும் காட்சி மட்டும் நடக்கிறது. கடந்த பத்து வருடத்தில், தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சி செய்த சாதனை என்ன? கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய  வெற்றியை கொடுத்தீர்கள். இந்தியாவே திரும்பி பார்த்தது. அதே வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலிலும் தாருங்கள். இழந்த தமிழக உரிமையை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்….

The post நாட்டுக்கு யார் வளர்ச்சி முக்கியம் உங்கள் மகனின் சொத்துக்களை எனக்கு எழுதி வைக்க தயாரா? அமித்ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Amit Shah ,Udumalai ,
× RELATED துணை முதலமைச்சரின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்