×

நாகர்கோவில் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருட்டு; கைதான கும்பலின் கூட்டாளிகள் கைவரிசை

வெள்ளிச்சந்தை, ஜூன் 23 : நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டி ஒருவரிடம் இரண்டரை பவுன் செயின் திருடப்பட்டது. குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவரது மனைவி மேரி ஏஞ்சல் (70). கடந்த 20ம்தேதி இவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்தார்.

பின்னர் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் செல்லும் பஸ்சில், ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மூங்கில்விளை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த சுமார் இரண்டரை பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தி, பஸ் முழுவதும் தேடினர். ஆனால் செயின் கிடைக்க வில்லை. பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்தி மேரி ஏஞ்சலிடம் மர்ம நபர் செயினை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் மேரி ஏஞ்சல் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நாகர்கோவிலில் ஓடும் பஸ்களில் கைவரிசை காட்டி வந்த பெண் திருட்டு கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இவர்களின் கூட்டாளிகள், குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்தது. அந்த கும்பல் தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவில் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருட்டு; கைதான கும்பலின் கூட்டாளிகள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Tanishlas ,Neyyur Manguzhi ,Iranial ,Kumari district ,Mary Angel ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...