×

நடப்பாண்டில் 752 டன் நெல், சிறுதானியங்கள் வழங்க இலக்கு

தர்மபுரி, ஜூலை 27: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி பேசுகையில், ‘ராகி கொள்முதல் செய்வதால், தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் ராகி சாகுபடி செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை போன்ற இடங்களில் ராகி கொள்முதல் செய்யப்படுகிறது.

அதை தவிர்த்து, தர்மபுரி மாவட்டத்திலேயே ராகி கொள்முதல் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை, தர்மபுரி மாவட்ட எரிகளுக்கு திருப்பி விட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை குடிமராமத்து செய்ய வேண்டும்,’ என்றார். மோளையானூர் சுப்பிரமணி, ‘பிர்க்கா அளவில் முழுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே, விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ஒரு விவசாயியின் பயிர் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்குவதில்லை. எனவே, எல்ஐசியில் உள்ளது போன்று தனியாக பயிர் காப்பீடு செய்த விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றார்.

விவசாய சங்க நிர்வாகி பிரதாபன் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்ட கிராமங்களில், பால் சொசைட்டியில் பால் கொள்முதல் செய்வதை, ஆவின் நிர்வாகம் குறைத்துள்ளது. கிராம பகுதிகளில் ஆவின் பாக்கெட் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், உள்நாட்டில் விலை குறைந்து, பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பருத்திக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,’ என்றார்.

தொடர்ந்து கலெக்டர் சாந்தி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் செய்யவும், சின்னாறு அணையின் உபரிநீர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிடவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை,இயல்பான மழையளவு 277.2 மில்லி மீட்டர் ஆகும். வேளாண்மை உழவர் நலத்துறையில் 2023-24ம் ஆண்டிற்கு 1.72 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை- 39, வெள்ளை பொன்னி, ஏடிடி-53, கோ-51, டிகேஎம்-13, சம்பா சப்-1, விஜிடி-1, ஐஆர்-20, கோ-50 ஆகியவை 97.86 டன் இருப்பு உள்ளது. சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, இதரதானியங்கள் 39.33 டன் இருப்பும், பயறு வகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை 112.35 டன் இருப்பும், எண்ணெய்வித்துக்கள் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு உள்ளிட்டவை 13.51 டன் இருப்பு உள்ளது.

வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு, இந்த ஆண்டிற்கு 752.6 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ம் தேதி வரை 128.47 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பட்டு வளர்ச்சித்துறை மூலம் 721 ஏக்கர் மல்பெரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்ெபரி பயிரிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில் அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சக்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post நடப்பாண்டில் 752 டன் நெல், சிறுதானியங்கள் வழங்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Darmapuri District Farmers Reduction Day ,Collector ,Shanti ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...