×

தேசிய சீனியர் தடகளம் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்ற விவசாயி மகன்

மன்னார்குடி: மாநிலங்களுக்கு இடையேயான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடந்தது. இப்போட்டிகளில் டிரிபிள் ஜம்ப் (மும்முனை தாண்டுதல்) பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரவீன் சித்ரவேல் என்ற இளம்வீரர் 17.18 மீட்டர் தாண்டி இந்திய அளவில் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.இதற்கு முன்பு 2014ம் ஆண்டு இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் அர்பிந்தர் சிங் என்பவர் 17.17 மீட்டர் தாண்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இளம்வீரர் பிரவீன் (20) திருவாரூர் மாவட்டம், வடுவூர் அடுத்த சோனாப்பேட்டை கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை சித்ரவேல், கபடி வீரர். விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரவீன் சிறு வயது முதலே தடகளத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். சொந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த இவருக்கு அப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்த மதியழகன் என்பவர் தான் உற்சாகம் அளித்து பல்வேறு உதவிகளை செய்து வந்தார். சென்னையில் நடந்த போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்கும் உலக தடகள சாம்பியன் ஷிப் மற்றும் வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடை பெறும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப் பை பெற்றுள்ளார். இதுகுறித்து இளம் வீரர் பிரவீன் கூறுகையில், 2024ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளேன். இப்போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தருவேன் என்றார். தேசிய அளவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப்போட்டியில் இளம்வீரர் பிரவீன் தங்கப்பதக்கம் வென்றதால் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post தேசிய சீனியர் தடகளம் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்ற விவசாயி மகன் appeared first on Dinakaran.

Tags : National Senior Athletics ,Mannargudi ,61st Inter-State National Senior Athletics Championship ,Nehru Indoor Sports Stadium, Chennai ,Dinakaran ,
× RELATED மண் வளத்தை காக்க சணப்பு; மடக்கி உழுதல் அவசியம்