×
Saravana Stores

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு

தூத்துக்குடி,நவ.19: தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட உள்ளன. இதையொட்டி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும்அறை, சுகாதார வசதிகள், ரயில் நிலையத்திற்கு கூடுதல் நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா செய்தியாளரிடம் கூறுகையில், ‘அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி- பாலக்காடு இடையே விரைவில் பாலருவி லிங்க் விரைவு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து போன்று, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துக்கள் ரயிலில் ஏற்படுவதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள், சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.

எனவே ரயிலில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை பயணிகள் கொண்டு செல்லக்கூடாது. தூத்துக்குடி- அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும்’ என்றார். இதில், கதிசக்தி முதன்மை திட்ட மேலாளர் ஐயப்ப நாகராஜா, முதுநிலை கோட்டப்பொறியாளர் நாராயணன், முதுநிலை கோட்ட செயல்பாட்டு மேலாளர் பிரசன்னா, வணிக மேலாளர் கணேஷ், முதுநிலை கோட்டப்பொறியாளர் (தெற்கு) பிரவீனா, தூத்துக்குடி ரயில் நிலைய முதுநிலை பகுதி பொறியாளர் லோகநாதன், ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tuticorin Railway Station ,Tuticorin ,Divisional Manager ,Sarath Vastava ,Railway Station ,Dinakaran ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே...