×
Saravana Stores

(தி.மலை) ஆன்லைனில் ₹91 ஆயிரம் நூதன மோசடி உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்

திருவண்ணாமலை, ஜூன் 21: ஆன்லைன் மோசடியில் பணத்தை பறிகொடுத்தவர்களிடம் மீட்கப்பட்ட தொகையை எஸ்பி கார்த்திகேயன் வழங்கினார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் குணசெல்வன் மகன் குபேந்திரன்(45). இவர் கடந்த 7ம்தேதி ஆன்லைனில் கடன் தொகை பெற முயற்சித்தார். அப்போது, அவரது வங்கி கணக்கு தொடர்பான விபரங்கள் மற்றும் ஓடிபி எண்ணை ஆன்லைனில் தொடர்பு கொண்டவர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து ₹74,521ஐ மோசடி நபர்கள் எடுத்துள்ளனர். அதேபோல், வந்தவாசி அடுத்த கோதண்டம் கிராமத்தை சேர்ந்த இமயவரம்பன் என்பவர் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் பின்னர் இருமடங்காக உங்களுக்கு கிடைக்கும் என கூறியதை நம்பி ₹21,000ஐ ஆன்லைன் மோசடி நபர்களிடம் பறிகொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பழனி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், மோசடி செய்து பணத்தை அபகரித்த இணையதளங்களை முடக்கினர். மேலும், பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட 2 பேரிடம் நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் ஒப்படைத்தார். அப்போது, ஆன்லைன் மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இணையதள குற்றங்கள் நடந்தால் உடனடியாக சைபர் கிரைமில் தாமதமின்றி புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post (தி.மலை) ஆன்லைனில் ₹91 ஆயிரம் நூதன மோசடி உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,SP ,Thiruvannamalai ,Karthikeyan ,Gunaselvan ,Tiruvannamalai ,Th.malai ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு