×

திருவாரூரில் கோடை கால பயிற்சி முகாமில் மாணவர்கள் பங்கேற்கலாம்

திருவாரூர், ஏப்.18: திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவால் நடப்பாண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோருக்கு திருவாரூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் வரும் 25ந் தேதி முதல் அடுத்த மாதம் (மே) 15ந் தேதி வரை நடைபெறவுள்ளது. விளையாட்டு பயிற்சி முகாமில் தடகளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்து, பளுதூக்குதல், சிலம்பம் மற்றும் டேக்வோண்டா உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிற்றுண்டிகள் மற்றும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர் இந்த பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் கோடை கால பயிற்சி முகாமில் மாணவர்கள் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaroor ,Thiruvarur ,Mohanachandran ,Tamil Nadu Sports Development Authority ,Thiruvarur District ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...