சென்னை: வேட்பு மனுவில் குளறுபடி காரணமாக அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, வீரமணியின் வேட்பு மனுக்களை ஏற்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், எதிர்ப்புகளையும் மீறி அவர்களது மனுக்களை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் மணிமாறன், அதிமுக சார்பில் அமைச்சர் உதயகுமார், அமமுக சார்பில் ஆதிநாராயணன் உட்பட 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளர்கள் உதயகுமார் (அதிமுக), மணிமாறன் (திமுக) சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு மனுபரிசீலனை துவங்கியது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யாவிடம் அமமுகவினர், ‘‘அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனுவை அரசு வழக்கறிஞர் முன்மொழிந்துள்ளார், அந்த அரசு வழக்கறிஞரின் நோட்டரி காலாவதியாகி விட்டது. எனவே அமைச்சரின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது’’ என கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.இதேபோல் அதிமுகவினர், ‘‘அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது மனுவை ரத்து செய்யவேண்டும்’’ என்றனர். இரு தரப்பினரும் மாறி, மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் ராம்கேவன், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யாவுடன் ஆலோசனை நடத்தினார். 2 வேட்பு மனுக்களையும் நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து திமுக உட்பட மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தகவலறிந்து அதிமுக, அமமுக கட்சியினர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒருவழியாக மதியம் 3.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக வேட்பாளர் உதயகுமார், திமுக வேட்பாளர் மணிமாறன், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்ட 28 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அரசு வழக்கறிஞர் முன்மொழிந்தது தவறு. ஆனால் முன்மொழிபவர் சம்பந்தப்பட்ட தொகுதியில் இருந்தால் போதுமானது. அவரது நோட்டரி பப்ளிக் 2021 வரை நீட்டித்திருப்பதற்கான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைகீழாக சீல் என்றும் புகார் கூறப்பட்டது. சீல் இருந்தால் போதும் என்பது விதி உள்ளிட்ட காரணங்களால் மனு ஏற்கப்பட்டது. இதேபோல், அமமுக வேட்பாளர் மீதான வழக்குகள் மீது தீர்ப்பு அறிவிக்கப்படாததால் அவரது மனுவும் ஏற்கப்பட்டது’’ என்றார்.வேலுமணி: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அப்போது திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தேர்தல் நடத்தும் அலுவலரான பேரூர் வட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பின்னர், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சொத்து விவரங்களை தவறாக கொடுத்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகளின் வருமானத்தை வெளிப்படையாக சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதனால், அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். குறிப்பாக, 2016-ம் ஆண்டு படிவம் 26-ல் 2015-2016-ம் ஆண்டுக்கான வருமானம் ரூ.7,19,815 என்றும், 2021-ல், 2015-2016-க்கான வருமானம் ரூ.4,01,210 என்றும் மாற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும், மனைவி வித்யாதேவி, மகள் சாரங்கி, மகன் விகாஷ் ஆகியோரது வருமானத்திற்கான வழி என்னவென்று குறிப்பிடவில்லை. தனது சொத்து விவரங்களை மாற்றியும், மறைத்தும் கொடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு கார்த்திகேய சிவசேனாபதி கூறினார். ஆனால் திமுக வேட்பாளரின் எதிர்ப்பையும் மீறி வேலுமணியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அமைச்சர் கே.சி.வீரமணி தனது மனைவி கே.பி.மேகலையின் பான் எண் என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வேட்பாளர் எச்யுஎப் பான் எண் குறிப்பிட்டுள்ளார். அதை சரிபார்க்கும்போது, அது வேட்பாளர் கே.சி.வீரமணியின் மகள் அகல்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. வேட்பாளர் சொத்துக்கள் தொடர்பான முழு அறிவிப்புகளும் தவறானவை மற்றும் பதிவுகள் மற்றும் ஆவணங்களுக்கு முரணானவை. அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தவறாக வழங்கி உள்ளார். எனது ஆட்சேபனைகளை பரிசீலித்து முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி உரிய பதில் அனுப்புவதாக கூறி அனுப்பி வைத்தார். இதே புகாரை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அவர் அனுப்பி உள்ளார்….
The post திருமங்கலம், தொண்டாமுத்தூர், ஜோலார்பேட்டையில் பரபரப்பு அமைச்சர் உதயகுமார், வேலுமணி, வீரமணி வேட்பு மனுவை ஏற்க கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.