×

திருபுவனம் சன்னதி தெருவில் சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவிடைமருதூர், மே.29: திருபுவனம் சரபேஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நடந்தது. திருபுவனத்தில் பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் தலம் கம்பகரேஸ்வரர் கோவில் சன்னதி தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு திருபுவனம் பேரூராட்சி நிர்வாகம் மூலதன மானிய திட்டம் மூலம் ஒரு கோடியே 43 லட்சம் ஒதுக்கீடு செய்து கடந்த 3 மாதம் முன்பு பணி ஆணை வழங்கியது. திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில் சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனவும் இந்நிலையில் ஒரு கோடியே 43 லட்சம் மதிப்பில் சாலை பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் திருபுவனம் வழக்கறிஞர் கோகுல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தனிநபர் கமிஷன் அமைத்து திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் சன்னதி தெரு சாலையை மறு அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன் பெயரில் கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி கமிஷன் நியமித்த வழக்கறிஞர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சன்னதி தெரு ஆக்கிரமிப்பு தொடர்பான இடங்களை அளவீடு செய்தனர். ஆக்கிரமிப்பு உள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை கடந்த 12ம் தேதி மதியம் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பு உள்ள கட்டிடங்கள் குறியீடு செய்யப்பட்டு அகற்றும் படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு சில கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும் சில கட்டிடங்கள் அகற்றப்படாமலும் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று திருபுவனம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் திருபுவனம் சன்னதி தெரு நாள் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

The post திருபுவனம் சன்னதி தெருவில் சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thirubhuvanam Sannati Street ,Thiruvidaimarudur ,Thirubhuvanam Sarabeswarar Temple Sannati Street ,Madurai ,High Court ,Sarabeswarar temple ,Thirubhuvanam, ,Kambakareswarar Temple Sannati Street… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...