திருச்செந்தூர்,டிச.24: மழை, வெள்ளம் சூழ்ந்த மின்கம்பத்தில் இரவிலும் ஏறி சரி செய்த மின் ஊழியர்களின் பணி மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த 17 மற்றும் 18ம் தேதி பெய்த பெருமழை தென் மாவட்ட மக்களை கடுமையாக பாதித்தது. இந்தத்தொடர் கனமழையால் ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து திருச்செந்தூருக்கு வரக்கூடிய மின் இணைப்பு அன்றைய தினமே துண்டிக்கப்பட்டது. இதனால் இரண்டு நாட்களாக திருச்செந்தூரில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனையடுத்து கல்லாமொழி துணை மின் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின்னழுத்த குறைபாடு காரணமாக திருச்செந்தூர் பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் மாலையில் மின்னழுத்த குறைபாடு கல்லாமொழியிலிருந்து திருச்செந்தூர் வரக்கூடிய மின்வயர் ஆலந்தலை சூசைநகர் அருகில் உள்ள குப்பை கிடங்கு பகுதியில் அறுந்து விழுந்தது. இதனைத்தொடர்ந்து மின்வாரிய உதவி பொறியாளர் முத்துராமன் தலைமையில் மின் ஊழியர்கள் இரவிலும் அறுந்து கிடந்த மின் வயரை வெள்ளம் சூழ்ந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10.30 மணி வரை பணியில் ஈடுபட்டனர்.
இதனால் நள்ளிரவு 11 மணிக்கு மேல் திருச்செந்தூர் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. நள்ளிரவிலும் வெள்ளம் சூழ்ந்த தண்ணீரில் இறங்கி மின்கம்பத்தில் ஏறி மின் ஊழியர்கள் பணி செய்தது மெய்சிலிர்க்க வைத்தது. இதேபோல் திருச்செந்தூர் ஆவுடையார்குளம் அருகில் பனைமரம் விழுந்து மின் கம்பம் உடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. அதனையும் நேற்று சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது புதிய மின்கம்பம் நடப்பட்டு வயர்கள் இணைத்து மின்சாரம் வழங்கப்பட்டது.
The post திருச்செந்தூர் பகுதியில் இரவு, பகலாக மின்கம்பம் சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.
