×

திருக்கோவிலூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

திருக்கோவிலூர், மே 22: திருக்கோவிலூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த காடகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஸ்ரீராம் (21). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பைக்கில் அருகே உள்ள திருக்கோவிலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காடகனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அங்கு இவரது பைக்கை 2 பேர் வழிமறித்து வழி கேட்பது போல் கேட்டுள்ளனர். ஸ்ரீராம் பைக்கை நிறுத்தியபோது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ஸ்ரீராமை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1,000 பணத்தை பிடுங்கியுள்ளனர்.

பின்னர் அவர் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள், மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து வாகனத்தில் தப்பிவிட்டனர். இதுகுறித்து ஸ்ரீராம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, உதவியாளர் அன்பழகன் மற்றும் போலீசார், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பில்ராம்பட்டு அருகே காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், வடகரை தாழனூர் கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் சார் முகிலன் (21) என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு காடகனூர் பகுதியில் தனது நண்பரான பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த விநாயமூர்த்தி என்பவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அரகண்டநல்லூர் போலீசார், அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து சார் முகிலனிடம் இருந்து பைக், வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரூ.1,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சார் முகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விநாயகமூர்த்தியை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,Tirukovilur ,Viluppuram District ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது