×

தமிழ்நாடு போலீஸ் எஸ்ஐ தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்கம்

புதுக்கோட்டை, ஏப்.22: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) (SI) பணிக்காலியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு வரும் ஜூலையன்று குறைந்தபட்சம் 20 வயதும் அதிகபட்சம் பொதுப்போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3 ஆகும். புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (23ம் தேதி) காலை 10.30 முதல் துவங்கப்படவுள்ளது. இதில், அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டும், ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. வாராந்திர மாதிரித்தேர்வுகளும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

The post தமிழ்நாடு போலீஸ் எஸ்ஐ தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Pudukkottai District Employment and Career Guidance Center ,Tamil Nadu Uniformed Services Recruitment Board ,Taluk and ,Forces ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...