×

தனியார் பேருந்தை சிறைபிடித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்2 கிலோ மீட்டர் வாகனங்கள் வரிசை கட்டி நின்றனபோளூர் நீதிமன்றம் அருகில் நிற்காமல் சென்ற

போளூர், ஏப்.19: போளூர் நீதிமன்றம் அருகில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறைபிடித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 கிலோ மீட்டர் வாகனங்கள் சாலையில் வரிசை கட்டி நின்றது. போளூர் அருகே 4 கிலோ மீட்டர் தூரத்தில் முருகாபாடி கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. நகரில் இருந்து நீண்ட தூரத்தில் போளூர் வேலூர் சாலையில் பங்களாமேடு என்ற இடத்தில் இதற்கான பேருந்து நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆரணி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவு வழங்கி உள்ளனர். ஆனால் எந்த பேருந்துகளும் அந்த இடத்தில் நின்று செல்வதில்லை. மேலும் அங்கு செல்வதற்கு யாராவது டிக்கெட் கேட்டாலே அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதில்லை. இதனால் வெளியூரிலிருந்து வரும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவரும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து போளூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அ.ராஜேந்திரன், செயலாளர் அ.பாலமூர்த்தி, துணை தலைவர் பி.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் மனு அனுப்பி வந்தனர். ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை போளூரை சேர்ந்த ரஜினிகாந்த் என்ற வழக்கறிஞர் திருவண்ணாமலையிலிருந்து போளூர் நிதிமன்றத்துக்கு செல்ல தனியார் பேருந்தில் டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அங்கு நிறுத்துவதற்கு நடத்துனர் மறுத்துள்ளார். தகவலறிந்த மற்ற வழக்கறிஞர்கள் வேலூர்-திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தை சிறை பிடித்தனர். அப்போது பயணிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி அந்த பேருந்தை அனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று காலை 10.40 மணிக்கு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போளூர்- வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் பிரச்னையில் சிக்கிய அதே தனியார் பேருந்தை வழக்கறிஞர்கள் சிறை பிடித்தனர். தகவலறிந்த போளூர் டிஎஸ்பி குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சமதானம் செய்தனர். ஆனால் ஆரணி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இங்கு வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். என கூறி வழக்கறிஞர்கள் சாலை மறியலை தொடர்ந்தனர்.

சுமார் 1 மணி நேரம் கழித்து ஆரணி வட்டார போக்குவரத்து அதிகாரி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பின்னர் அதிகாரிகளிடம் பிரச்னை குறித்து வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். அதன் பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஆரணி வட்டார போக்குவரத்து அதிகாரி சரவணன் உத்தரவின் பேரில் அந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இந்த பிரச்னை குறித்து போளூர் நீதிபதி திருமணி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போளூர் டிஎஸ்பி குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலைசெல்வன், போளூர் கிளை மேலாளர் பிரபாகரன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ஆலோசனை வழங்கி பேசினார். இதனால் நேற்று போளூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தனியார் பேருந்தை சிறைபிடித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்
2 கிலோ மீட்டர் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன
போளூர் நீதிமன்றம் அருகில் நிற்காமல் சென்ற
appeared first on Dinakaran.

Tags : Polur ,court ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முதல்வர் கோப்பைக்கான...