×

சென்னை விமானநிலையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்சுடன் மோடி ஒரு மணி நேரம் ஆலோசனை: உள்கட்சி மோதல், சசிகலா விவகாரம் குறித்து பஞ்சாயத்து என தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அதிமுக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்சி மோதல், சசிகலா விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். அதிமுக சார்பில் அவர் மட்டுமே கலந்து கொண்டார். இந்தநிலையில், விழா முடிந்து இரவு 8.10 மணிக்கு சென்னை விமானநிலையத்துக்கு மோடி வந்தார். பின்னர் விஐபிக்களுக்கான அறையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் மோடியை தனியாக சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையின்போது கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் விசாரித்துள்ளார்.இருவரும் மோதிக் கொள்வதால், கட்சி தேய்ந்து கட்டெரும்பாகி விட்டது. நீங்கள் ஒன்றிணையாவிட்டால், கட்சி காணாமல் போகும் என்று மோடி எச்சரித்ததாக கூறப்படுகிறது. மற்றொருபுரம் சசிகலா தனியாக அதிமுக நிர்வாகிகளை இழுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். இதனால் கட்சிக்குள் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஏன் எல்லோரும் ஒன்றிணையக்கூடாது என்று மோடி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோடியை சந்தித்த 5 பேரில், எடப்பாடி பழனிசாமி உள்பட 4 பேரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் சசிகலாவுக்கு கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லை. அவர் பின்னால் ஒரு நிர்வாகி கூட செல்லவில்லை. கட்சி கட்டுக்கோப்பாக எங்களிடமே உள்ளது. அதனால் அவரை கட்சியில் சேர்த்தால் தேவையில்லாத பிரச்னைதான் உருவாகும். கட்சியில் தற்போது 2 கோஷ்டி இருப்பது, 3 கோஷ்டியாக மாறிவிடும். அவரை கட்சியில் சேர்க்காமல், அரசியலை விட்டே ஒதுங்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது. மெஜாரிட்டியாக 4 பேர் ஒரே கருத்தைக் கூறியதால், ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், எல்லோர் மீதும் தமிழக அரசு லஞ்ச ஊழல் வழக்குகளை பதிவு செய்ததாக மோடியிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மாஜி அமைச்சர்கள் மீது ஏற்கனவே வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் சில ஆவணங்களை பிரதமர் அலுவலகத்தில் கொடுத்து வைத்திருப்பதாலும், ஏற்கனவே இவர்களுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள் ரெய்டுகளில் சிக்கியபோது பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், இது பற்றி பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கூட்டணி குறித்தும், அதிமுகவை வலுவாக்குவது தொடர்பாகவும் மோடியிடம் சில கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் பேசியதை மோடி கவனமாக கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மொத்தத்தில் அதிமுகவினரிடம் மோடி பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்….

The post சென்னை விமானநிலையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ்சுடன் மோடி ஒரு மணி நேரம் ஆலோசனை: உள்கட்சி மோதல், சசிகலா விவகாரம் குறித்து பஞ்சாயத்து என தகவல் appeared first on Dinakaran.

Tags : Modi ,EPS ,OPS ,Chennai airport ,Sasikala ,Chennai ,Edappadi Palaniswami ,O. Panneerselvam ,
× RELATED 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும்: நம்புகிறார் வைத்திலிங்கம்