செஞ்சி, ஜூன் 12: செஞ்சி அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். செஞ்சியை அடுத்த கம்மந்தூர் மதுரா பாண்டியன்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்கள் உடலை தனியார் நிலத்தின் வழியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு கொண்டு செல்லும்போது மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து வருவாய்த்துறையினருக்கு அப்பகுதி மக்கள் சுடுகாட்டுக்கு தனி பாதை கேட்டு மனு அளித்துள்ளனர்.
மனு மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாக்கோபு (90) உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது தனியார் நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சுடுகாட்டுக்கு செல்ல தனியே பாதை அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் ஏற்கனவே சென்ற பாதை வழியாகவே பிரேதத்தை எடுத்து செல்ல வழி செய்ததால் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.