தேனி, ஏப்.23: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான இலவச பயிற்சி துவங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் தாலுகா மற்றும் ஆயுதப்படைக்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான 1299 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு www.tnsurb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற மே மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (24ம்தேதி) காலை 10 மணிக்கு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் இலவச பாடக்குறிப்புகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
மேலும், இவ்வலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் ஏற்கனவே பயின்று தேர்ச்சி பெற்ற 19 நபர்கள், காவல் துறையில் சார்பு ஆய்வாளர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர். இத்தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெற செய்வதை இலக்காகக் கொண்டு தேனி மாவட்ட வேலைவாயப்பு அலுவலக மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். இப்பயிற்சி வகுப்பில் சேருவது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 6379268661 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
The post சீருடைப்பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்: நாளை தொடங்குகிறது appeared first on Dinakaran.
