×

சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ் கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார் திருவண்ணாமலையில் சர்வதேச அன்னையர் தின விழா

திருவண்ணாமலை, மே 24: திருவண்ணாமலையில் நடந்த சர்வதேச அன்னையர் தின விழாவில், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச சிறப்பு அன்னையர் தின விழா நேற்று நடந்தது. சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை சிறப்பிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சிறப்பு அன்னையர் தினம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த விழா நடைபெற்றது. அதில், சிறப்பு குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான விழிப்புணர்வுக் ஆலோசனைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவை தொடங்கி வைத்து கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது: சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை கவரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி மற்ற இடங்களுக்கு செல்வதற்கு தேவையான உதவி உபகரணங்களும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிப்பது மிகவும் சவாலானது. பொருளாதார ரீதியாகவும் மற்றும் குடும்பத்திலும் அவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தி சமூகத்தில் சிறந்த நிலையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது சிறப்பானதாகும்.

மேலும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றம் காண என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் வகையில், 50 சிறப்பு அன்னையர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை இரண்டு நபர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ் கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார் திருவண்ணாமலையில் சர்வதேச அன்னையர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Collector ,Dharbagaraj ,International Mother's Day ,Tiruvannamalai ,International Special Mother's Day ,Disabled Welfare Department ,Tiruvannamalai Collector's Office ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...