×

கொரோனா நிவாரணத்திற்கு பிச்சையெடுத்து ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த முதியவர்

நெல்லை:  பிச்சையெடுத்து சேகரித்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரணத்திற்கு நெல்லை கலெக்டரிடம் நேற்று முதியவர் ஒப்படைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி(70). 1980ம் ஆண்டு முதல் மும்பையில் இருந்த இவர் அங்கு பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தார். மனைவி இறந்த பின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை மதுரை கலெக்டரிடம் சமீபத்தில் ஒப்படைத்து இருந்தார். இதற்காக கடந்த சுதந்திரதின விழாவில் விருதளித்து கவுரவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பிச்சையெடுத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் கொரோனா நிவாரணமாக அளித்தார். இதுகுறித்து பூல்பாண்டி கூறுகையில், யாசகமாக பெறும் பணத்தை ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளன்று அரசு பள்ளிக்கு நலநிதியாக வழங்கி விடுவேன். தற்போது கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக யாசகத்தின் மூலம் கிடைத்த பணத்தில் மாவட்ட நிர்வாகங்களிடம் வழங்கி வருகிறேன். விருதுக்காகவோ, பாராட்டுக்காகவோ இதை நான் செய்யவில்லை. கொரோனா முடியும் வரை இதைச் செய்வேன். பின்னர் வழக்கம்போல் அரசு பள்ளிகளுக்கு உதவுவேன் என்றார்….

The post கொரோனா நிவாரணத்திற்கு பிச்சையெடுத்து ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் ஒப்படைத்த முதியவர் appeared first on Dinakaran.

Tags : Corona ,Alanginaru, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED அலமாதியில் கொரோனா காலத்தில் நிறுத்தி...