×

கொடைக்கானலின் அப்சர்வேட்டரி மலைச்சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொடைக்கானல், ஜூன் 3: கொடைக்கானல் அப்சர்வேட்டரி மலைச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகளில் மிக முக்கியமான சாலையாக அப்சர்வேட்டரி சாலை உள்ளது. இந்த அப்சர்வேட்டரி பிரதான சாலை வழியாகத்தான் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும். மேலும், சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாகவும் இருந்து வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த அப்சர்வேட்டரி சாலையின் வழியாகத்தான் சென்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, ஏரிச்சாலை பகுதியிலிருந்து அப்சர்வேட்டரி செல்லக்கூடிய இந்த மூன்று கிலோமீட்டர் சாலையும் முழுவதுமாகவே சேதமடைந்தது. மலைச்சாலைகளை பொறுத்தவரையில் ஏற்றம் இறக்கம் அதிகமாக அமைந்திருக்கும். இதனால் கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் மெதுவாக செல்லக்கூடிய நிலையும், மேலிருந்து கீழே வரக்கூடிய வாகனங்கள் மிக வேகமாக வருவதும் வழக்கமான ஒன்றுதான்.இந்நிலையில் இந்த அப்சர்வேட்டரி சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குமே இரு புறங்களிலும் பக்கவாட்டு சுவர்கள் இல்லாததால் ஆபத்தான நிலையிலேயே வாகனங்கள் சென்று வருகின்றன.ஏரி சாலை முதல் அப்சர்வேட்டரி சாலை வரை, இந்த ஒரு மாதத்தில் 40க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மேலும் இந்த சாலையில் பயணிக்கும்போது செம்மண் மேடு, என்ற பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சாலையின் இடது மற்றும் வலது புறத்தில் இருக்கக்கூடிய வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் தொடர்ந்து சாலையும் சரிந்து வருவதால் அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சாலையை சீர் செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பாக மூன்று கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை பணிகள் துவங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஆகையால் விபத்து அபாயம் உள்ள இந்த அப்சர்வேட்டரி மலைச்சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலின் அப்சர்வேட்டரி மலைச்சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Observatory Hill Road ,Kodaikanal ,Princess of the Hills ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...