×

பேரிடர் தந்த பாடம்

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 18 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள், வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். நாடே, இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் அனைவருக்கும் அரசு நன்றி தெரிவித்தது. பல நாட்கள் உணவின்றி வாடியதால், சிறுவர்களின் உடல் மெலிந்திருந்ததே தவிர பெரிய அளவில் பாதிப்பில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளது மிகப்பெரிய ஆறுதல்.

எல்லா நாடுகளிலும் இதுபோன்ற முன் அனுபவம் இல்லாத சம்பவங்கள் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன. மலேசிய விமானம் காணாமல் போய் பல ஆண்டுகளானாலும் அதில் ஒரு துண்டு பாகத்தை கூட இன்னமும் கண்டறிய முடியவில்லை. இத்தனைக்கும் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இப்போது தனியார் நிறுவனத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் உரிய செயல்திட்டங்கள் தேவை. தாய்லாந்தில் மீட்புப்பணி வீரர்களாலேயே வீடியோவாகவும், புகைப்படமாகவும் படமாக்கப்பட்டுள்ளது, சிறப்பான அம்சம். இதுபோன்ற வீடியோ பதிவுகள் பின்னாட்களில் மீட்புப் பணிக்கு மிகப்பெரிய அளவில் உதவும்.

பாதிக்கப்பட்டவர்களை நீர் வழியாகத்தான் அழைத்து வர வேண்டும் என்ற நிலையில், அதற்கான கருவிகள் மிக அவசியம். தாய்லாந்து சம்பவத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க், சிறிய அளவிலான நீர்மூழ்கி ஒன்றை தயாரித்து கொண்டு வந்திருந்தார். இது மீட்பு நடவடிக்கையில் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் சிறப்பான ஒரு கருவியாகும். இக்கருவியில் பாதிக்கப்பட்டவர்களை படுக்கச் செய்து, அதை இழுத்துக் கொண்டு வெளியே கொண்டு வர முடியும்.

உள்ளே இருப்பவருக்கு ஆக்சிஜன் கிடைக்கும் என்பதால், அவருக்கு நீச்சல் தெரியாவிட்டால் கூட, உயிருடன் உள்ளே இருக்க முடியும். மீட்பு பணி வீரர்கள் அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர முடியும். இந்தியாவில் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது, ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் போவதுதான். அதற்கான எளிதான கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்