×

காவேரி மருத்துவமனை சார்பில் முதுகு, கழுத்து பிரச்னைகளுக்கு ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ விழிப்புணர்வு: நாளை நடக்கிறது

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட் சார்பில் “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் பாலமுரளி கூறியதாவது: கோட்டூர்புரம் அண்ணா நூலக கலையரங்கத்தில் நாளை காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட் சார்பில் “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

முதுகு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கிற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு மற்றும் முதுகுதண்டு அறுவை சிகிச்சை நிபுணர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவர், விளையாட்டு மருத்துவ நிபுணர், வலி தணிப்பு சிறப்பு மருத்துவர் மற்றும் இத்தகைய வலியால் அதிகம் பாதிக்கப்படுகிற நபர்களான காவல்துறையினர், நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருடன் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் யோகா, இயன்முறை சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவர்கள், உளவியல் மருத்துவர் மற்றும் மாற்று சிகிச்சை நிபுணர்கள் உள்பட 26 பேர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

இசை, நடனம் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி ஆகிய கலைநிகழ்ச்சிகளும் இணைந்ததாக ஸ்பைன் ரீசார்ஜ் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உலகளவில் மருத்துவமனை வருகைக்கான 2வது மிக பொதுவான காரணமாக இருப்பது முதுகு மற்றும் கழுத்து பிரச்னைகளே. 40 வயதிற்குப் பிறகு, 10 பேரில் 8 பேர் முதுகு மற்றும் கழுத்து பிரச்னைகளினால் அவதிப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த பிரச்னைகளுள் ஏறக்குறைய 95 சதவீதம் பணி, செயல்நடவடிக்கை, உடல் தோரணை, காயம் அல்லது உடற்பருமன், புகை பிடித்தல் மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு தொடர்புடைய வாழ்க்கைமுறை பிரச்னைகளினால் தான் முதுகு மற்றும் கழுத்து வலி பெரும்பாலும் ஏற்படுகிறது.

இந்த வலியை எப்படி சமாளிப்பது, செயல்பாடுகளை எப்படி குறைப்பது, எப்படி உடலை வளைப்பது, தரையில் அமர்வது, உடற்பயிற்சிகளை தவிர்ப்பது, தலையணை வைத்துக்கொள்வதை தவிர்ப்பது, பெல்ட் அணிவது உள்பட பல்வேறு விஷயங்களில், பல கட்டுக்கதைகளும், உண்மையற்ற தகவல்களும் உலவுகின்றன. இதனால் பல நேரங்களில் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன. ஸ்பைன் ரீசார்ஜ் என்ற நிகழ்ச்சி மூலம் அதிகம் பேசப்படாத இந்த கடுமையான பிரச்னை குறித்து மக்கள் மத்தியில் சரியான தகவல்களை வழங்கி விழிப்புணர்வு உருவாக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவேரி மருத்துவமனை சார்பில் முதுகு, கழுத்து பிரச்னைகளுக்கு ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ விழிப்புணர்வு: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,CHENNAI ,Kaveri Spine Institute ,Alwarpet, Chennai ,Dr. ,Balamurali ,Kotturpuram Anna ,
× RELATED பார்க்கின்சன்ஸ் நோயால்...