×

கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

குளத்தூர், ஜூன் 24: குளத்தூர் அருகே கூலி தொழிலாளியை களைவெட்டியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். குளத்தூர் அடுத்துள்ள பனையூர் தெற்குத் தெருவை சேர்ந்த பிரம்மையா மகன் பழனிமாரி(38). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை இவரது தங்கை வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வேல்முனியாண்டி என்ற பாண்டி மகன் ஜெயகணேஷ்(27) ஓட்டிவந்த பைக் பள்ளத்தில் இறங்கியபோது சகதி தண்ணீர் பழனிமாரி மீது பட்டுள்ளது. இதனை பழனிமாரி தங்கை சக்திஈஸ்வரி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

அப்போது ஜெயகணேஷ், அவரது தம்பி பாலமுருகன், தந்தை வேல்முனியாண்டி என்ற பாண்டி ஆகியோர் பழனிமாரி மற்றும் அவரது தந்தை பிரம்மையாவை களைவெட்டியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பழனிமாரி, பிரம்மையா ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பழனிமாரி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் எஸ்ஐ அந்தோணிதிலீப் வழக்கு பதிந்து ஜெயகணேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

The post கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Palanimari ,Brahmayya ,Panaiyur South Street ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...