பழநி, செப். 27: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்.14ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதல் நிலை தேர்வினை நடத்தியது. இத்தேர்வினை சுமார் 5.81 லட்சம் பேர் எதிர்கொண்டனர். கடந்த செப்.23ம் தேதி இத்தேர்விற்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான உத்தேச கட்ஆப் வெளியிடப்படுமா என தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: கடந்த குரூப் 2 மெயின் தேர்விற்கும் இந்த முறை நடைபெறவுள்ள குரூப் 2 மெயின் தேர்விற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கடந்த முறை ஒரே மெயின் தேர்வு நடத்தபட்டது. ஆனால், இம்முறை குரூப் 2 பணிகளுக்கு தனி மெயின், குரூப் 2ஏ பணிகளுக்கு தனி மெயின் தேர்வு.
இதனால் எந்த மெயின் தேர்வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே, தேர்வர்களின் நலன் கருதி புதிய முறையாக டிஎன்பிஎஸ்சி உத்தேச கட் ஆப் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். அதுபோல் தேர்வும் தமிழ்மொழி தாள் பாடத்தில் வினாக்கள் சிறிது கடினமாகவும், ஆங்கில மொழி தாள் வினாக்கள் சிறிது எளிதாகவும் இருந்தன. எனவே, வருங்காலங்களில் மொழி தாள் வினாக்களின் கடினத்தன்மையை சம விகிதத்தில் அமையுமாறு பின்பற்ற வேண்டும். அதுபோல் உத்தேச கட்ஆப் வெளியிட டிஎன்பிஎஸ்சி பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post குரூப் 2, 2ஏ தேர்வு உத்தேச கட் ஆப் வெளியாகுமா? appeared first on Dinakaran.