குன்னூர் : குன்னூர் குரும்பாடி பழங்குடியின கிராமத்தில் ஒன்றிய அரசின் வீடுகள் சீரமைப்பு திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாடு முழுவதும் பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அந்த தொகையை கொண்டு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாய கூடம் என பழங்குடியின கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் தலைமையில் நடைபெறுகிறது.ஒன்றிய அரசின் சிறப்பு திட்டத்தின் மூலம் குன்னூர் அருகே உள்ள குரும்பாடி கிராமத்தில் 10 வீடுகள் இடித்து புதிதாக கட்ட ஒரு வீட்டிற்கு தலா 2.67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, குன்னூர் ஊராட்சி ஒன்றியம் தலைமையில் வீடுகள் இடித்து கட்டும் பணி நடந்தது.இதில், சேதமடைந்த பழங்குடியினரின் வீடுகளை முழுவதும் இடித்து கட்டாமல் சேதமடைந்த வீடுகளையே சீரமைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பர்லியாறு பஞ்சாயத்து அதிகாரிகள் உடந்தையுடன் சேதமடைந்த வீடுகளை இடிக்காமல் அதற்கு மேல் பில்லர் அமைத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் குன்னூர் அதிகாரிகள், வீட்டிற்கு 2.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால், ஒன்றிய அரசு ரூ.2.67 லட்சம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பர்லியாறு பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர். வீடுகளை முழுவதும் இடிக்காமல் சேதமடைந்த வீடுகளில் கூரைகள் மட்டுமே சீரமைத்து வருகின்றனர். 11 வீடுகள் சீரமைப்பதற்கு 10 வீடுகள் மட்டுமே சீரமைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பழைய வீட்டின் சுவற்றினை இடிக்காமல் அதோடு சேர்த்து பில்லர் அமைத்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதால் இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post குரும்பாடி பழங்குடியின கிராமத்தில் வீடுகள் சீரமைப்பு திட்டத்தில் முறைகேடு -கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.