சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 32,000 இடங்களையும், ஆந்திராவில் 23,500 இடங்களையும் அதிகரிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தேசிய அளவில் மருத்துவக் கல்விக்கு மவுசு குறையாமல் உள்ளது. ஆனால் பொறியியல் கல்வியைப் பற்றி இவ்வாறு கூற முடியவில்லை. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 54,000 இடங்கள் நிரப்பப்படவில்லை.
சிலகுறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே, அனுமதிக்கப்பட்ட இடங்கள் முழுமையாக நிரப்பி உள்ளன. பல பொறியியல் கல்லூரிகளை நடத்துவதே சிரமமாக உள்ளது என்று நிர்வாகத் தரப்பினர் கூறுகின்றனர். எனினும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் கூடுதலாக 32,000 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 2023-24ம் கல்வியாண்டில் 2,75,830ஆக இருந்த எண்ணிக்கை, இப்போது 2024-25 கல்வியாண்டில் 3,08,686 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 23,500 இடங்களை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அனுமதித்துள்ளது. இதையடுத்து ஆந்திராவில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை 1,83,532 உயர்த்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 32,000 இடங்களுக்கு அனுமதி: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.