சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அனைத்து பள்ளிகளிலும் 7ம் தேதி கலைத் திருவிழாவை தொடங்க வேண்டும். முதற்கட்டமாக வட்டார அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டு நெறிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வெளியிட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த மாவட்டங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியும் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான குறுவள மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வட்டார அளவில் 7ம் தேதி போட்டிகள் நடத்தி 8ம் தேதிக்குள் வெற்றிபெற்ற மாணவர்கள் தொடர்பான விவரங்களை 8ம் தேதிக்குள் இஎம்ஐஎஸ்-ல் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட அளிவிலான போட்டிகள் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்கள் 21ம் தேதி உள்ளீடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும்.
குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்துவதற்கு 10 அமைப்புக் குழுக்களை தனித் தனியே அமைத்தல் வேண்டும். போட்டி நடக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதன்மை அமைப்பாளராக செயல்படுவார். உதவி அமைப்பாளராக மேலும் ஒரு தலைமை ஆசிரியர் செயல்படுவார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி 1, பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி 2, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர் 2 பேர் இந்த குழுவில் இடம் பெற வேண்டும். மாவட்ட அளவிலான ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளர் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான வெற்றியாளர்களின் தகவல்கள் இஎம்ஐஎஸ்-ல் உள்ளீடு செய்ய வேண்டும்.
வட்டார அளவில் நடந்த போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இந்த நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மாவட்ட போட்டிக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு வரும் 7ம் தேதி முதல் பள்ளிகளில் கலை திருவிழா: அரசு உத்தரவு appeared first on Dinakaran.