×

பெட்ரோல் டேங்கர் லாரி வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: வழக்கம் போல இயங்கியது

சென்னை: மூன்று நாட்களாக நடந்து வந்த பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு செல்ல டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வாடகையை உயர்த்தி தர கோரி கடந்த 9ம் தேதி முதல் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய லாரி உரிமையாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றம் தடை விதித்தது.இந்நிலையில், போராட்டத்தை வாபஸ் பெற்றதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் லாரிகள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் வரும் 20ம் தேதி அகில இந்திய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதில் அனைவரும் கலந்துகொள்ள போவதாகவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்