செய்யாறு, ஜூலை 10: பேனரில் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தக்கூடாது என செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஓபிஎஸ் அணி மீது அதிமுகவினர் புகார் அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் பையூர் சந்தானத்தை வரவேற்கும் விதமாக நேற்று முன்தினம் பேனர் வைக்கப்பட்டது. அதில், இரட்டை இலை சின்னம் பயன்படுத்தியதால் அந்த பேனரை அகற்றக்கோரி அதிமுக நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் ஓபிஎஸ் அணியினர் வைத்திருந்த பேனர்களை அதிரடியாக அகற்றினார்கள். இதற்கிடையில் ‘நாங்கள் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவோம், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த உரிமை உண்டு’ என்று இன்ஸ்பெக்டர் பாலுவிடம் மாவட்ட செயலாளர் சந்தானம் தலைமையில் ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர். இதனை அறிந்த அதிமுகவினர், புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் அதிமுகவினரிடமும், எதிர் தரப்பினரான ஒபிஎஸ் அணியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகையிட்ட அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கேப்சன்…செய்யாறு பகுதியில் ஓபிஎஸ் அணியினர் பேனரில் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
The post காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஓபிஎஸ் அணி மீது அதிமுகவினர் புகார் செய்யாறில் பரபரப்பு பேனரில் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தக்கூடாது appeared first on Dinakaran.
