×

ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு: வரும் 28ம் தேதிக்குள் ஆட்சேபணைகளை தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

 

கரூர், ஆக. 24: கரூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வெளியிட்டார். ஒரு வாக்கு சாவடிக்கு 1500 வாக்காளர்கள் வீதம் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 28ம்தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2024ம் ஆண்டுக்கான வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பான வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் பொருட்டு ஏற்கனவே உள்ள 1,047 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கரூர், குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வாக்குச்சாவடி மையங்களின் விவரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டியவை, வாக்குச்சாவடி மையங்களை புதிதாக உருவாக்குதல், இணைத்தல், மாறுதல் செய்திட இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன்படி கரூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு காந்தி கிராமத்தில் 1,546 வாக்காளர்கள் உள்ளதால் அந்த வாக்குச்சாவடியை இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட 142வது வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக உள்ளதால் இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை குறித்து கண்டறியப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரும் 28ம் தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி மறுவரையறை செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 29ம்தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா, சந்தியா, சப்-கலெக்டர் சைபுதீன், தேர்தல் வட்டாட்சியர் விஜயலெட்சுமி, திமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தாமதத்தால் சலசலப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வுக்கு கலெக்டர் வர நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொறுமை இழந்த அதிமுக பிரதிநிதிகள் வி.சி.கே.ஜெயராஜ், திருவிக ஆகியோர் அங்கிருந்து வெளியேறினர். பின்னர், மற்ற அரசியல் கட்சியினரும் வெளியே சென்றனர். கூட்ட அரங்கில் திமுக பிரதிநிதிகள் மட்டும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், வெளியே சென்ற அரசியல் கட்சியினரை அதிகாரிகள் ஓடிச் சென்று, கலெக்டர் வந்துவிட்டதாக கூறி மீண்டும் அழைத்து வந்தனர். அதிமுகவினர் மட்டும் புறப்பட்டு சென்றுவிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த கலெக்டர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், திடீரென வேறு ஒரு கூட்டம் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து அதிமுக தவிர்த்து பிற கட்சிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் வருகை தாமதமானதால் சலசலப்பு ஏற்பட்டது.

The post ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு: வரும் 28ம் தேதிக்குள் ஆட்சேபணைகளை தெரிவிக்க கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karur ,Collector ,Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன்...